google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பரிணாம வீழ்ச்சி (கதைக்கவிதை)

Saturday, November 17, 2012

பரிணாம வீழ்ச்சி (கதைக்கவிதை)
து மூன்று பதிவுகளின் தொகுப்பு)

து ஒரு மலைக்கோயில்
ஆயிரம் படிகளுக்கு மேல்
அதன் மேல் நடந்து சென்று
ஆண்டவனைத் தரிசிக்கவேண்டும்.

பாதித் தூரம் சென்றவுடன்
அந்தத் தம்பதியினர்
தத்தி தத்தி நடக்கும்
தங்கள் குழந்தையுடன்
ஓய்வாக இருந்த போது....

அந்தக் குழந்தையோ  
துள்ளி குதித்துக்கொண்டிருந்த
குரங்கு குட்டியைக் கண்டு
அதனுடன் விளையாட சென்றது

பயந்து போன தந்தை
குழந்தையைத் தூக்க ஓடிய போது....

எங்கிருந்தோ பாய்ந்து வந்தது
சப்தமிட்டுக்கொண்டு
அந்தக் குட்டி குரங்கின் அம்மா
அந்தத் குழந்தையை
அது எதுவும் செய்யாமல்
தன் குட்டியோடு குட்டியாக
அரவனைத்துக் கொண்டது...

அந்தக் குரங்கு குட்டியும்
அந்த மனிதக் குட்டியும்
கொஞ்சி விளையாடினர்
அந்த அம்மா குரங்கு
சிறிது நேரம் கழித்து
குட்டியை அழைத்துக்கொண்டு
பிரியா விடை கொடுத்து
புறப்பட்டுச் சென்றது.

தன் குழந்தையையும்
தன் மனைவியையும்
அழைத்துக்கொண்டு அவன்
அந்த மலைக்கோயில்
மேலே செல்லாமல்..
வந்த வழியே கீழ்நோக்கி
திரும்பி நடந்தான்....

**************************

கூன் விழுந்த உடம்பு
பஞ்சடர்ந்த தலை
பழுது பட்ட பார்வை
அழுக்கடைந்த
வெள்ளைச் சேலை
அதுதான் அம்மாயி

அந்த மலைக்கோயில்
அடிவார கடைத்தெருவில்
அங்குமிங்கும் அலைந்து
கான்போரிடமெல்லாம்  
கேட்டுக்கொண்டிருந்தாள்
தன் மகனையும்
தன் மருமகளையும்
பார்த்தீர்களா...? என்று
நைய்ந்த வார்த்தைகளில்...

அலைபாயும் கூட்டம்
ஆண்டவனைத் தரிசிக்க
தேங்காய் பழம் தட்டுடன்
அந்த மலைக்கோயில்
படிகட்டுகளில் ஏறிக்கொண்டு...
பதில் சொல்வாரில்லை இவளுக்கு.

விரட்டும் உச்சி வெயில்
வறட்டுத் தாகம்
மயங்கும் தருணம்
அம்மாயியை தாங்கிப் பிடித்து
அணைத்துக்கொண்டு
அழைத்துச் சென்றால்
அங்கே வந்த செல்லம்மாள்
அவளைப்போலவே
அழுக்கடைந்த கிழிந்த சேலை
பஞ்சடைந்த வெள்ளைத்தலை
பார்வை பழுதில்லை
கூன் முதுகில் விழவில்லை

தெருக் கடைசியில் இருந்த
மரத்தடி திண்டு கல்மேடையில்
அம்மாயியை  அமரச்செய்து  
பாத்திரத்தில் இருந்த கஞ்சியை
பருகக் கொடுத்தாள் செல்லம்மாள்.
அங்கே இருந்தார்கள்
இன்னும் மூன்று வயதான பெண்கள்
இரண்டு வயதான ஆண்கள்.

“ஏன் தாயி...
உன் மகன் கூட வந்திருப்பிய....?
கோயிலுக்குப் போகலாமுன்னு
கூட்டியாந்திருப்பானே....
பஸ்சாண்டுல இறங்குனதும்
காணாமப் போயிருப்பானே
இப்படித்தான் நானும் இவங்களும்
இங்கனக்க கிடந்து அல்லாடுறோம்

அவனுங்க வரமாட்டானுங்க
நம்மள காணாமப் போடத்தான
கூட்டியாரானுங்க..பாவிப்பயலுக
பெத்த வயிறு நெனைச்சா
பத்திக்கிட்டு எரியுது....
இங்க நல்லாத்தாம் இருக்கும்
கொசுவெல்லாம் கடிக்காது..
இரத்தம் சுண்டிப்போச்சே நமக்கு.
குளிருதான் அடிக்கும் தாயி.
போன மார்கழியில
நம்ம ஆளுக இரண்டு
பாவம்...போய்ச் சேர்ந்துச்சுக....
சோத்துக்கும் பஞ்சமில்ல...
கீழ் கோயில்ல மொட்ட போட்டு
சோறாக்கிப் போடுவாக.....

புலம்பிக்கொண்டிருந்தாள் செல்லம்மாள்.

அப்போது அங்கே வந்த
ஒரு கிழட்டு குரங்கு
இரண்டு வாழைப் பழங்களை
செல்லம்மாளிடம் நீட்டியது

அதிலோன்றை
அம்மாயிடம் கொடுத்த
செல்லம்மாள் சொன்னாள்
அந்தக் குரங்கிடம்...
“என்ன பார்க்கிற..
இவளும் நம்மளைப் போல
அநாதை ஜென்மம்தான் என்று. 

அழுகையை அடக்கிக் கொண்டு
வடியும் கண்ணீருடன்
மகனையும் பேரனைனும் நினைத்து 
மரத்தடியில் சாய்ந்தாள் அம்மாயி.

அந்தக் கிழட்டு குரங்கும்
அவள் மடிமீது தலை வைத்து
அவள் முகத்தை
ஏறிட்டுப் பார்த்தது.....
 
வாழ்க்கை இங்கே மங்காத்தா..?
உள்ளே-வெளியே விளையாட்டா..?   
***************************************

ன் குழந்தையையும்
தன் மனைவியையும்
அழைத்துக்கொண்டு அவன்
அந்த மலைக்கோயில்
மேலே செல்லாமல்..
வந்த வழியே கீழ்நோக்கி
திரும்பி நடந்தான்....

அடிவாரத்தில் இருந்த
கடைகளில் விசாரித்தான்
தாயின் அடையாளங்களைச் சொல்லி...

அதில் ஒருவர் சொன்னார்
“தெருக் கடைசியில் இருக்கும்
அரசமரத்தடியில் போய்ப் பாரு
அங்கேதான் இருப்பார்கள்
வயதானவர்கள் நிறையஎன்று.

அந்த அரசமரத்தடி திண்டை
அவர்கள் அடைந்தபோது..
தன் தாய் அம்மாயி
தன் மடி மீது படுத்திருந்த
குரங்கின் தலையை வருடியபடி
மரம் மீது சாய்ந்திருப்பதைக் கண்டான்
அருகில் சென்று
அம்மா...என்று அழைத்தான்
“வாம்மா..வீட்டுக்குப் போகலாம்

திடுக்கிட்ட அம்மாயி..
“வந்திட்டியா சாமி...
எண்ணப் பெத்த ராசா...
சாமியப் பாத்தாச்சா..?

தன் மகனையும் பேரனையும்
நெஞ்சோடு அனைத்து
உச்சி முகர்ந்து முத்தமிட்டாள்.

அப்படியே சாய்ந்து
வி...ழு..ந்...தா....ள்...
ம..டி.....ந்....தா....ள்...

அந்தக் கிழட்டுக் குரங்கும்
இவர்களைப் பார்த்து
ஏதோ முனங்கியபடி போனது....
  
தரிசனம் தேடிடும் மானிடா!-தெய்வ
தரிசனம் தாயில்லாமல் ஏதடா!
நிதர்சனம் வாழ்வில் இதுதானடா!-நெஞ்சில்
கரிசனம் தாய்மேல் கொள்ளடா!
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1