google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: டி.எம்.எஸ் -ஆறு மனமே ஆறு

Sunday, May 26, 2013

டி.எம்.எஸ் -ஆறு மனமே ஆறு

freeonlinephotoeditor  
டி.எம்.எஸ் -
எனது இல்லத்திலிருந்து
மூன்று தெருக்கள் தாண்டி அவரது இல்லம்
அதைத் தாண்டிச் செல்லும்போதெல்லாம்
என் மனதுக்குள் ஒரு புத்துணர்வு கிடைக்கும்
சிலநேரங்களில் ஓரிரு நிமிடங்கள் நின்று
அவர் முகம் தெரிகிறதா..? என்று பார்ப்பேன்..
எப்போதாவது ஒருநாள் 
அவரது தரிசனம் கிடைக்கும்..
பாட்டுக்கடவுளைப் பார்த்தது போல் 
மனது புல்லரிக்கும்....

அவர் ஒரு சிங்கக்குரலோன்....
அவரது பாடல்களை 
இரவில் தூங்கப் போகுமுன் 
நான் கேட்பதில்லை...
தூக்கம் வராது 
விழிப்புணர்வுதான் வரும்
தூங்காதே தம்பி தூங்காதே 
பாடியவர் அவர் அல்லவா...!

தினமும் விழிக்கும் போது 
(அப்போது நானும் ஒரு பக்திமான்) 
அவரதுமுருகன் பாடல்களில்..
மண்ணானாலும் 
திருச்செந்தூரில் மண்ணாவேன்...
என்ற  பாடல்தான் 
நான் கேட்கும் முதல் பாடல் 
(எனது ஊர் திருச்செந்தூர் அருகில் 
என்பதால் கூட இருக்கலாம்)

இல்லையேல் 
சிறுவனாக இருந்தபோதிலிருந்து 
கோயில் விழாக்களில் 
அந்தக் காலத்து பெரிய இசைத்தட்டுகள் 
பாடும் பக்திப்பாடல்களில் 
அவரது குரல் .....
உள்ளம் உருகுதையா....
பலமுறை கேட்டதால்கூட 
அவரது பாடல்கள் மீது 
இனம்புரியாத ஈர்புசக்தி 
(இப்போதுதான் கடவுள்
இவரது பாடல்களைக் கேட்டார் போல....
அவருக்கு நேரலையாகத் துதிபாட 
இவரையும்  அழைத்துக்கொண்டாரே...?)

சமீப காலமாக 
நானொரு பகுத்தறிவாளனாக...
அப்போதும் அவரது பாடல்தான்....
தினமும் காலையில் 
நான் கேட்கும் பாடல்....
சின்னப் பயலே சின்னப் பயலே... 
சேதி கேளடா...

என் கைபேசியும்

ஒளிமயமான எதிர்காலம் 
என் உள்ளத்தில் தெரிகிறது 
என்றுதான் என்னையும் அழைக்கும்

என்றும் மறக்கமுடியாத அனுபவம்..
அது கைபேசி அறிமுகமான காலம் 
ஆறுமனமே ஆறு 
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு 
என்ற பாடல்தான் அதில் ரிங்டோன் 
அப்போது தொடர்ந்து அழைப்புகள்  
ஒரே தொலைபேசி எண்ணிலிருந்து
எனக்கு வந்துகொண்டே இருக்க....

(அப்போதெல்லாம் 
அழைப்பை  ஏற்றுக்கொண்டாலே 
நமக்கும் கைபேசி அலைவரிசை  கம்பெனிகள் 
நம்மிடம் பெரிய தொகையை 
கட்டணம் வசூலிப்பார்கள்) 

அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட 
அடுத்த நொடியில் அது துண்டிக்கப்படும்..
பிறகு மீண்டும் அழைப்பு வரும்...
இப்படிப் பல நாட்கள் .....

(நாம் தொடர்புகொன்டாலும் 
எதிர் முனையில் அழைப்புத் துண்டிக்கப்படும்...
ஒருநாள் என் அழைப்பை ஏற்றுக்கொண்ட 
எதிர் முனையில் பேசியர் ஒரு பெண்மணி...
அவர்களிடம் நான் ஏன் இப்படி 
அடிக்கடி தொல்லை செய்கின்றீர்கள்..? என்றபோது...
அவர்கள் சொன்னது...
"தம்பி கோவிச்சிக்காதப்பா...
எனக்கு ஆறுமனமே ஆறு பாடல் 
கேட்பது என்றால்  உயிர்..
உன் கைபேசியில்
அதைக் கேட்கவே 
அடிக்கடி போன்செய்கிறேன்..." 
இன்றும் இந்த நிகழ்வை 
என்னால் மறக்கமுடியாது..)

அட..
ஒரு பாடகரின் குரல் 
எத்தனைபேருக்கு 
நிம்மதியைக் கொடுத்துள்ளது...? 
எத்தனை பேருக்கு 
ஆறுதலாக இருந்திருக்கிறது..?   
எத்தனைபேர் இதயங்களில் 
தன்னம்பிக்கையை விதைத்துள்ளது..? 
இப்படியும் ஒரு பாடகரா...? 

கவிஞர்களின் வார்த்தைகள் 
இசையமைப்பாளர்களின் தாலாட்டில் 
இவர் போன்ற பாடகர்களின் குரல்களில்
உயிரோடு உலா போகின்றன..
உன்னதமாகின்றன..உண்மையாகின்றன

அவர் ஒரு பாடகர் திலகம்....
அந்தக் (1960-1975) காலக்கட்டங்களில்
அவர் குரலில் வாய் அசைக்காதவர்கள்
வெள்ளித் திரையில் இல்லவே இல்லை
அவர் பாடலைக் கேட்டே 
அந்த நடிகர்களை 
அன்று அறியும் நிலை

இசைச் சக்கரவர்த்தி-
ஒருபுறம்  
அடுத்தவர் இசைக்கு 
இவர் பாடிய பாடல்கள்
இன்றும்  பிரபலமாக....
இன்னொரு புறம் 
இவரது  இசைக்கு  
இவர் பாடிய பாடல்கள் 
சாகா வரம் பெற்றன...


அவர் ஒரு ஞானகலா பாரதி....
இவரது பாடல்களில் இவரது குரல் 
பாரதி போன்று கம்பீரமாக...
தமிழ் தாய்க்கு நீராடும் கடலுடுத்த....
என்று பாடிய போதும்
பாரதத் தாய்க்கு தேசிய கீதமாக 
ஜனகனமன  பாடியதிலாகட்டும் ...

என்றும் அழியாதை  
இசைக்கீதம் தந்த கீதவாரி....


வற்றாத இசைக்கடல்
இந்திய அரசின் பத்மஸ்ரீ
தமிழ்நாட்டின் கலைமாமணி
இவர் வாங்காத விருதுகள் இல்லை
இவரைப் பாராட்டாத பட்டங்கள் இல்லை 


அன்று 
அவர் வாங்கிய விருதுகளுக்கு 
அளவேயில்லை 
இன்று அவர் வாங்கிய 
இறைவனடி சேர்ந்தார் 
என்ற விருதுக்கு...........
அழாமல் இருக்க 
முடியவில்லை...முடியவில்லை  

                                          thanks-YouTube-by tmsganesh

அய்யா...
உமது பாடல்களை 
முன்பு கேட்கும்போது
இதயம் கும்மி அடிக்கும்  ...
இனிமேல் 
உமது பாடல்களைக் 
கேட்கும்போது........
இதயம் விம்மித் துடிக்குமே..
என்ன செய்வேன்?  
ஆறு மனமே ஆறு  


     
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1