google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: படிப்புத்தான் பிழைப்பைக் கெடுத்தது....?

Wednesday, June 26, 2013

படிப்புத்தான் பிழைப்பைக் கெடுத்தது....?

                       ******அர்த்தமில்லாத அகராதி-1*****
(குறிப்பு-இந்தப் பதிவு என் வாழ்க்கை அனுபவத்தின் அர்த்தம் சொல்லும் அகராதி சில நேரங்களில் எனக்கே புரிவதில்லை உங்களுக்கு...? விருப்பமிருந்தால் தொடரவும் )
1982-ல் நான் ஆங்கிலத்தில் முதுகலை  பட்டம் முடிக்கும் தருவாயில் என் பேராசிரியர்கள்...
 "நாங்கள் தொடர்ந்து பி.எட் ஆசிரியர் படிப்பும் முடித்தால்தான் உங்களுக்கு வேலைகிடைக்கும் இதுதான் இன்று நாட்டு நிலை"  
என்று எங்களுக்கு சொன்ன அறிவுரை...
நானும் ஆசிரியர் பட்டப் படிப்பும் முடித்து வேலை தேடி சென்னை வந்தேன் படித்து முடித்தப்பிறகுதான்  தெரிந்துகொண்டேன்...நான் படித்த ஆங்கில இலக்கியம்  படிப்புக்கு சுதந்திர இந்தியாவில் செல்லாக்காசு என்று.

பி.ஏ. படிக்க சேரும் போது பி.காம்,பி.பி.ஏ...போன்ற சில படிப்புகளுக்கு அந்தக் கல்லூரியில் அப்போது ரூ5,000/- நன்கொடை கேட்டார்கள்  ஆனால் வசதியிருந்தும் எனது தந்தையோ...படிப்பதற்கு எவனாவது காசு கொடுப்பானடா...? என்று தத்துவம் பேசி என்னை காலியாக கிடந்த படிப்பு  பி.ஏ.ஆங்கில இலக்கியத்தில் சேர்த்துவிட்டார்...

அதுவரை வடுகபட்டி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தமிழில் படித்த எனக்கு பி.ஏ.(ஆங்கிலம்) வகுப்பறை பேய் அடித்தது போல் இருந்தது..முதல்முதலாக  செமெஸ்டர் அறிமுக மாணவர்கள் நாங்கள்தான்...முதல் இரண்டு செமஸ்டர்களிலும் தமிழ் பாடத்தில் மட்டுமே...(நான் மட்டுமல்ல எங்க வகுப்பு நண்பர்களில் ஒருவரைத்தவிர..அவர் கான்வென்ட்டில் படித்தவர்) தேர்ச்சி பெற்றேன்

முதலாண்டு படிக்கும் போது 21 மாணவர்கள் இருந்த வகுப்பறை இரண்டாமாண்டு 11 மாணவர்களாக சுருங்கிவிட்டது.(மற்றவர்கள் எங்கே போனார்கள்? என்று எனக்கும் யாருக்கும் தெரியாது..ஆனால் அறிவு சார்ந்தவர்கள்...பிழைக்கத் தெரிந்தவர்களாக அவர்கள் இருந்திருக்க வேண்டும்)அதனால் எங்கள் ஆங்கில பேராசிரியர் எங்களை அழைத்து (எங்கே நாங்களும் ஓடிவிட்டால் அவர்கள் பிழைப்பு போய்விடுமோ? என்று பயந்து) ஒவ்வொருவர் மேலும் தனிக்கவனம் செலுத்தி தன்னம்பிக்கையும் தைரியமும் கொடுத்து எங்களை அதிலும் குறிப்பாக என் மீது ரொம்ப சிரத்தை எடுத்து....

அந்தப் பேராசிரியர்  கொடுத்த பயிற்சியில் சில சொல்கிறேன்...
முதலில் அவர்  இந்தியர்கள் தாகூர், ஆர்.கே.நாராயணன்.. போன்றவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நாவல்,கதைகள்,நாடகங்கள்,கவிதைகள்.. போன்றவைகளை கொடுத்து அவைகளை ஆங்கிலம்-தமிழ் அகராதி உதவியுடன் தமிழில் மொழியாக்கம் செய்து அவரிடம் காண்பிக்கச் சொன்னார்...பிறகு அதில் நல்ல பயிற்சி வந்தவுடன் வேறு சில ஆங்கில இலக்கிய புத்தகங்களைக் கொடுத்து தமிழாக்கம் செய்ய சொன்னார்... கடைசியாக சில தமிழ் புத்தகங்கள்,நாவல்கள்,கவிதைகள் கொடுத்து ஆங்கில மொழியாக்கம் செய்யச் சொன்னார்....
நான் மூன்றாம் ஆண்டு முடிக்கும் போது முதல் வகுப்பில் தேறினேன்..எனக்கே நம்பமுடியாத விசயமாக இருந்தது.
அவரை என் வாழ்நாளில் மறக்கமுடியாது..அவர் பெயர்கூட எனக்கு நினைவு இல்லை அது 1977-79 காலகட்டம் நான் படித்தது...மதுரை நாகமலை புதுக்கோட்டை எஸ்.வி.என்.கல்லூரி

எப்படி இருந்தநான் முதுகலை படிக்கும் காலத்தில் ஆங்கில கட்டுரைப் போட்டிகளில் முதல் பரிசு பேரும் மாணவனாக உயர்ந்தேன்..அந்த வாத்தியாரின் பொற்பாதம் தொட்டு வணங்க வேண்டும் 

சரி..என் வேலை விசயத்துக்கு வருகிறேன்  
அப்போது சென்னை மாம்பலத்தில் இருந்த முதுநிலை படித்தவர்களுக்கான அரசு வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்ய நின்ற கூட்டம் கணக்கிடமுடியாது  பதிவு செய்யும் போதே அவர்கள் சொல்லிவிட்டார்கள் பதிந்தவர்கள் வரிசை படி பார்த்தால் எனக்கு நேர்முக தேர்வுக்கு தகவல் வர இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று...

சில  தனியார் பள்ளிகளில் தற்காலிக வேலை கிடைக்குமா? என்று போனால்..அய்யோ..அவர்களின் கான்வென்ட் ஆங்கிலம் VS என்னுடைய தத்துபித்து (பேச்சு)ஆங்கிலம்...ம்...கூம்..நோ சான்ஸ்....
சரி டியுசன் சென்டர் வைக்கலாம் என்று அப்பாவிடம் அடம்பிடித்து  மாதம் 500  வாடகையில் ஒரு மொட்ட மாடி பிடித்து..தொடங்க..வந்தது வினை..டைபாய்டு...அதை மூடிவிட்டு ஊருக்கு போய்விட்டேன் 

மீண்டும் ஒரு மாதம் கழித்து.... வேறு வேலை செய்யலாம் என்று சென்னை வந்தேன்   எனக்கு தெரிந்த இடம் தெரியாத இடம் என்று ஏறி இறங்காத இடமில்லை வேலைகிடைக்கவில்லை ஆனால் அப்போதுதான் ஒருவர் சொன்ன வார்த்தை எனக்கு அறிவு புகட்டியது... "என்னப்பா...நீ எம்.ஏ.படிச்சிருக்க...நாங்கலாம் அம்புட்டு படிக்காதவங்க உன்னை வச்சி எப்படி வேலை வாங்குவது...?" என்று.
அப்போதுதான் தெரிந்து கொண்டேன் அடடா...நம்ம படிப்புதான் நம்ம பிழைப்பைக் கெடுத்திருக்குனு....

உடனே முடிவுசெய்தேன் ஒரு நிறுவனத்தில் வேலை கேட்டேன்
என்ன படிப்பு தகுதி...? என்று கேட்டதற்கு எஸ்.எஸ்.எல்.சி.(SSLC) என்றேன்
என்ன அனுபவம்? என்ற அவர்கள் அடுத்த கேள்விக்கு ஆறு வருடங்கள் சொந்தக்காரர் கம்பெனியில் வேலை செய்ததாக சொன்னேன்..உடனே வேலை கிடைத்தது....வீடு வீடாக சென்று  தவணை வியாபாரம் சீட்டு ரூ.10,20 என்று சேர்க்கவேண்டும் எனக்கு சம்பளம் மாதம் ரூ.250 ஆனால் குறைந்தது 5 சீட்டுகள் பிடிக்க வேண்டும் அதற்கு 5 ரூ கமிஷன்....முதல் ஊதியம் முதல் அனுபவம் சென்னை முழுக்க சந்து பொந்து அறிமுகம் அப்படியே வாழ்க்கை உயர்ந்தது...இன்று நான் ஒரு வணிக நிறுவனத்தில் விற்பனை மேல் அதிகாரி என்னிடம்  நூறு பேருக்கு மேல் வேலை செய்கிறார்கள் 

நான் வாங்கிய பட்டம்  படிப்பு எனக்கு உதவவில்லை இன்று நான் செய்யும் வேலைக்கு அந்தப் படிப்பும் தேவையில்லை மனிதனுக்கு மனிதர்களை மேய்ப்பது ரொம்பக் கடினம்  அந்த வேலையைத்தான் நான் செய்கிறேன் அதற்கு நான் படித்த படிப்பு தேவையில்லை ஆனால் நான் படித்த படிப்பை விட என் உழைப்பு என்னை இரண்டு முறை லண்டன் மாநகரம் கூட்டிச் சென்றது...எந்த ஆங்கிலம் படித்தேனோ அந்த ஆங்கில நாட்டை வலம் வரச் செய்தது..அதுவும் புரியவில்லை அதனால்தான் அர்த்தமில்லாத அகராதி என்று பெயர் வைத்தேன்

இப்படியெல்லாம் இன்று எழுதி உங்களை தொல்லை செய்வதற்கு 
அன்று மொழியாக்கம் செய்யவைத்த என் ஆங்கில பேராசிரியர்தான் காரணம் அகராதி=அகரம்+ஆதி என்கிறார்கள் புரியவில்லை? வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்லும் நூல் அதே நேரம் நான் ஒர் அகராதி படித்தவன் நல்லவேளை  அகராதி  (அகம்பாவம்) பிடித்தவன் அல்ல.
                                                  
                                                    ................................(எப்போதாவது தொடரும்)
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1