அர்த்தமில்லாத அகராதி-2
கவிப்பேரசு வைரமுத்து வளர்ந்த ஊர் வடுகப்பட்டி...
எனக்கும் வளர்ந்த ஊர்....வடுகப்பட்டி இந்த இரண்டும்தான் எங்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமை.
வடுகப்பட்டி என்ற பெயரில் நிறைய ஊர்கள் உண்டு.இது பெரியகுளம் அருகில் உள்ள இயற்கை அழகு தவிழும் கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத இடைப்பட்ட நிலையில் உள்ள மிகப் பெரிய ஊர்.அங்கிருந்து பார்த்தால் கொடைக்கானல் மலையின் இயற்கை அழகு எழிலாகத் தெரியும் ஊரின் ஓரமாக மழை காலங்களில் மட்டும் சேரும் சகதியுமாக மஞ்சள் நிறத்தில் வரும் ...வராகநதி அருகில் தாமரைக் குளம் என்ற பாசன நீர் குளம் உள்ள பசுமையான ஊர்.இன்னொரு புறம் வைகை அணை நீர்த்தேக்கம் அதனால் நீர்பஞ்சம் கிடையாது கிணற்றிலிருந்து கமலைக் காளைகள் நீர் இறைக்கும் அழோ அழகு...அதைப் பார்த்துக்கொண்டிருந்தாலே பாட்டு தானாக வரும்
அங்குள்ள அரசினர் உயர் நிலைப் பள்ளியில் நான் 6-ஆம் வகுப்பு படிக்கும் போது வைரமுத்து SSLC படித்தார்..1968-1974 காலகட்டமாக இருக்கும் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல் அப்போதே அவரது கவிதை திறனை அறிந்திருக்கிறேன்...இன்றும் அந்த நிகழ்வு என் மனத்திரையில் பாடிக்கொண்டிருக்கிறது....
அன்று எங்கள் பள்ளிக்கு அரசு கல்வித்துறை மேல் அதிகாரி ஒருவர் வந்ததால் அவரது பேச்சைக் கேட்க நாங்கள் அனைவரும் பள்ளி மைதானத்தில் அழைத்து அமரவைக்கப்பட்டோம்..அப்போது கடவுள் வாழ்த்து பாடியவரும்...தொடர்ந்து அந்த உயர் அதிகாரிக்கு வாழ்த்துப்பா பாடியதும் அன்று ஒரு மாணவர் அவரே இன்றைய கவிப்பேரரசு வைரமுத்துமானவர்
"ஜொலிக்கும் வானத்து நட்சத்திரங்கள் மத்தியில் அமர்ந்திருக்கும் நிலவு போல..."(இப்படித்தான்இருந்திருக்க வேண்டும்) என்று அந்த உயர் அதிகாரிக்கு அவர் புகழாரம் தொடுத்த போது எழுந்த கையோசை அடங்க வெகு நேரமாகியது.
கவிதை எழுத யாரும் சொல்லிக் கொடுத்து எழுத முடியாது...ஏனென்றால் கவிதை என்பது உணர்வின் பிரதிபலிப்பு.நாம் எதை உணர்கிறமோ அந்த உணர்ச்சி அத்தோடு அடங்கிப் போகாமல் உடனோ அல்லது என்றாவது ஒருநாள் வெளிப்படும் வடிவமே கவிதை.ஒரு கவிஞன் பிறவியிலேயே கவிஞனாகப் பிறக்கிறான்...ஆனால் காலம்தான் அவனை வெளிப்படுத்துகிறது... அந்த வகையில் இது கவிப்பேரரசுக்கு பொருந்தும்.
அதே சமயம் எங்கள் பள்ளியில் உத்தமப்புத்திரன்( புனைப்பெயராகத்தான் இருக்கும்) ஒரு தமிழாசிரியர்...பண்டைய காலப் புலவர்கள் தோற்றத்திலேயே மாணவர்களுக்குத் தமிழ்பால் ஊட்டுவார்.... அவருடைய பாதிப்பு பிறவியிலேயே கவிப்பேரரசு வைரமுத்துக்குள் இருந்த கவியுணர்வை தூண்டியிருக்கலாம்...ஆனால் எனக்கும் அவராலும் இவராலும் என்னுள் அன்று எழுந்த பாதிப்பு நானும் எதையாவது எழுதிக்கொண்டு கவிதை என்று சொல்லிக்கொள்கிறேன்...
அதற்குப்பிறகு வைரமுத்து அவர்களை நான் பார்த்ததில்லை...காலம் செய்த கோலம் நான் வேலை தேடி சென்னை வந்து இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்த ஷேர்-ரூம் இருந்த இடம்...கோடம்பாக்கம் ட்ரஸ்ட்புரம்..
அன்று அவர் வீடு இருந்த பக்கத்து தெரு..இன்று அவர் வீடு இருக்கும் பிள்ளையார் கோயில் எதிர் குவார்ட்டர்ஸ்....1983-1986 வரை நிறைய நேரங்களில் அவரைப் பார்த்திருக்கிறேன் எந்த அறிமுகமும் கிடையாது...அவர் எழுதிய புத்தகங்கள் மட்டுமே என்னோடு பரிச்சயம்
சென்னை வந்த பிறகு எனக்கும் எழுதவேண்டும் என்று ஆசை எழுந்தது...எழுதியவைகள் தீபம்,கணையாழி போன்ற பத்திரிகைகளில் வந்தது...ஆனால் தீபம் ஆசிரியர் அய்யா.நா.பார்த்தசாரதியின் அழைப்பின் பேரில் அவரைச் சென்று சந்தித்தேன்...அவரோ என் படைப்புகள் சில வாசித்துவிட்டு..."தம்பி...நீங்கள் முதலில் ஒரு வேலை தேடிக்கொள்ளுங்கள்..அதற்குப் பிறகு நீங்கள் எவ்வளவு வேண்டுமாயினும் எழுதுங்கள்" என்று அறிவுரை சொல்லி வழியனுப்பினார்...
அப்புறமென்ன..? வேலை கிடைத்தது...எழுதுவதற்கு நேரம் கிடைக்க வில்லை ...வாழ்வின் வளம் கண்டப் பிறகு இப்போது கிடைக்கும் நேரத்தில் இப்படி எதையாவது....எழுதுகிறேன்...என் நினைவுகளை அசைப்போடுகிறேன்
கவிப்பேரரசு வைரமுத்தும் அவரது புகழும் வடுகப்பட்டியில் உண்டாக்கிய பாதிப்பு ஏராளம் சமீபத்தில் வடுகப்பட்டியில் என்னுடன் பயின்ற பள்ளி நண்பரை சென்னையில் சந்தித்தேன்..
"இப்போதெல்லாம் நம்ம ஊர்ல நிறையப் பேருக கையில நோட்டும் பேனாவுடந்தான் ப்..பே..னு அலையிறானுங்க...அம்புட்டு பேரும் கவிஞன்களாம்...என்னத்தச் சொல்லுறது..."
நான் என்ன தத்துவஞானியா...? அறிவுரைகள் சொல்ல...எழுதும் என்னருமை நண்பர்களே! உங்கள் எழுத்து உங்களுக்குச் சோறு போடும் என்றால் எழுதுங்கள்...எழுதிக்கொண்டே இருங்கள்...இல்லையேல் என்னைப்போன்று தின்ன சோறு செரிக்க இப்படி எதையாவது கொறித்துக்கொண்டு... எழுதுங்கள்..எதையும் எதிர்பார்த்து எழுதாதீர்கள்...உங்கள் வாழ்க்கையைக் கற்பனைக் கரையான்கள் செல்லரிக்க விடாதீர்கள்..
அகராதி=அகரம்+ஆதி என்கிறார்கள் வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்லும் நூல் என்கிறார்கள் ஆங்...வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்லும் அகராதி எங்கே..? என்று தெரியவில்லை...தெரிந்தாலும் அர்த்தமில்லாத அகராதியாகத்தான் இருக்கும் அது.
.........................................(எப்போதாவது தொடரும்)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |