google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: என்னைப் பற்றி.....

Tuesday, May 08, 2012

என்னைப் பற்றி.....



நெல்லையில் பிறந்தேன் 
மதுரையில் வளர்ந்தேன் 
சென்னையில் வாழ்கிறேன் 

பத்து வயதில் தந்தை
படிக்க அழைத்து சென்றார்
வடுகபட்டி பள்ளியில்....
அங்குதான் கவிப்பேரரசு
வைரமுத்து பயின்றார்
எனக்கு மூத்தவராக...
அப்போதே தெரியும்
அந்த கவிச்சூரியன்
சுடர் விட்டுக்கொண்டிருந்தது
அங்கு உத்தம புத்திரன் என்ற
தமிழ் புத்திரன் ஆசிரியர்
அவரிடம் படித்ததால்தானோ
என்னிடமும் வந்தது
இந்த எழுதும் பழக்கம்

மதுரையில் மூன்று வருடம்
வெள்ளைச்சாமி கல்லூரியில்....
அங்கே இருந்தார்கள்
இரண்டு தமிழ் சிங்கங்கள்
பேராசிரியரும் எழுத்தாளருமான   
சொல் விளங்கும் பெருமாள்
பட்டிமன்ற பேச்சாளர் ராஜாராமன்
இவர்களாலும் என் எழுத்து வளர்ந்தது

தூத்துக்குடி வ.ஊ.சி.கல்லூரியில்
மூன்று ஆண்டுகள்...
முதலாமாண்டு படிக்கும்போது   
என் தாய் இறந்துபோனார்  
நான் பரிச்சை எழுதி வரும்வரை
புதைக்கப்படாமல்......

வேலை இல்லாத மூன்று வருடங்கள்
சென்னை மாநகரில் கண்ணிமாராவில்
புத்தகங்களோடு புதைந்து கிடந்தேன்
கிடைத்த வேலையும்
படிப்புக்கு ஏற்றதில்லை என்று 
பரிதவித்தார் தந்தை
அன்று போனவர்தான் ஊருக்கு
அடுத்தநாள் வந்தது சேதி
காலமாகிவிட்டார் என்று....
சென்னையிலிருந்து போவதற்குள் 
புதைத்துவிட்டார்கள் அவரை...
அவர் இறந்ததை காணாததால்
அவர் இருப்பதாகவே இன்றுவரை
நினைத்துக்கொண்டிருக்கிறேன்

கிடைத்த வேலையை
பிடித்துக்கொண்டேன்
கடலில் தத்தளித்தவனுக்கு
கிடைத்த துரும்புபோல....
காலம் மாறியது 
வாழ்வும்  மாறியது 

அன்றைய   முதல்வர்
தலைமையில் திருமணம்.... 

ஒரே மகன்
சின்ன குடும்பம் 

சீரான வாழ்க்கை 
எழுதிப் பிழைக்கவில்லை 
இன்னும்  உழைக்கிறேன் 
தினமும்  18  மணி நேரம் 
குளிர் சாதன அறையில் 
அறை  என்பதை விட 
சிறையில் .....
கோட்டும்  சூட்டும் அணிந்த 
நாகரிக  கொத்தடிமை 
ஆனாலும் வருந்தவில்லை 
உழைத்து உண்ணும மகிழ்வுதான் 
 
எந்த இனத்தோடும் 
எந்த  மதத்தொடும் 
எந்த அரசியலோடும் 
சேரவில்லை...
கண்டதையும்  
கேட்டதையும் 
கொண்டதையும் 
எழுதுகிறேன் எழுதுவேன் 
என் எழுத்துக்கள் 
என் உணர்வின் 
பிரதிபலிப்புகள் 

பெரிய அரசியல்வாதிகள்
உயர் காவல் அதிகாரிகள்
பெரும் நீதிமான்கள்.....
நிறைய பழக்கங்கள்....
என் எழுத்துக்களால்
யாரேனும் காயம்பட்டு
அதனால் அவர்கள் நட்பு
அழிந்துவிட கூடாது....
புனைப்பெயரில்  
புதைந்து கிடக்கிறேன்
காலம்  வரும்...வெளிப்படுவேன் 

நிதானமாகத்தான் எழுதுகிறேன் 
சிலநேரங்களில் சிதைவதுவுண்டு 
எழுதுகோல் காகிதத்தை கிழிப்பதுபோல....    

ஆனாலும் அவ்வப்போது
விழுவேன் எழுவேன்           
எழுவேன் விழுவேன்
வீழ்ந்து போனதில்லை..
நிறைய நேரங்களில்
மௌனியாகவே வாழ்கிறேன் .

இப்படியே போகுது
என்வாழ்க்கை......
என்னைப் பற்றி  எழுத 
வேறு என்ன இருக்கு?
**************************
 காணொளி-நான் யார் தெரியுமா?

 Thanks-YouTube-Uploaded by rajshritamil on Jun 21, 2011

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1