என் சின்னஞ்சிறு வயதில்
உன் சின்னஞ்சிறு உருவம்
என்னைச் சிரிக்க வைத்தது
இன்றோ என்னை
சிந்திக்க வைத்ததே!
முற்றத்து வாசலில்
சிதறிக் கிடக்கும்..
சோற்றுப் பருக்கைகளை
தத்தி தத்தி நீயும்
அழகாய் உன் அழகால்
கொத்திக் கொத்தி தின்னும்...
அடடா...அழகே ..அழகு!
வசந்த காலம் வந்துவிட்டால்
வைக்கோல்,காகிதம்,புற்களில்..
கூரை மோட்டில்
மாட்டுக் கொட்டகைகளில்
அடை மழைக்கும் ஒழுகாத
அழகான வீடு கட்டும்
இயற்கையின் படைப்பில்
பொறியியல் விஞ்ஞானி நீ!
அழகாய் வீடு கட்டி
அதிலே முட்டைகளிட்டு
குஞ்சுகளோடு குலாவி.........
இல்லறமே நல்லறம் என்று
இயம்பிய மெஞ்ஞானி நீ!
ஒ..குருவி! சிட்டுக்குருவி!
கடைசியாக உன்னைப் பார்த்தது
எப்போது என்று நினைவில்லை..
எங்கேதான் நீ போனாயோ
எதுவும் தெரியவில்லை...?
அமைதி விரும்பி நீ
அதனால்தான்
இந்த ஆர்ப்பாட்ட உலகில்
தப்பாட்டம் வேண்டாமென்று .
அமைதியாகப் போய்விட்டாயோ...?
இல்லையேல்...
இங்கே இருக்கும்
அறிவில்லா எத்தர்கள்
ஆயுர்வேத சித்தர்கள்
ஆண்மை பெருக....
ஆ..வென்று விழுங்கு
சிட்டுக்குருவி லேகியம்
என்றுதான் சொல்லி...
உம்மைத்தான் அழித்தாரோ.... ?
அய்யகோ...
இன்னிசை பாடும்
உன் குரலிசை இல்லையே...?
இதுவரை அப்படியொரு
மெல்லிசை கேட்டதில்லையே..?
(ஒ..குருவி! சிட்டுக்குருவி!
என்ன செய்ய முடியும் என்னால்?
இன்று உலகச் சிட்டுகுருவி தினம்
உன்னை நினைத்து என்னால்
ஒப்பாரிதான் வைக்க முடிந்தது!)
.............................பரிதி.முத்துராசன்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |