பாட்டி வைத்தியம் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.இது என்ன புதுசா தாத்தா வைத்தியம்....?குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு இருமல் சளி வாயுத்தொல்லை..போன்று வீட்டில் வரும் சிறு உபாதைகளை வீட்டில் உள்ள பெரியவர்கள் காலங்காலமாகத் தீர்த்து வைக்கும் உடனடி நிவாரண முறைகளே பாட்டிவைத்தியம் என்பது அறிவோம்...தாத்தா வைத்தியம்...?
இது நான் அறிந்த என் தாத்தா வைத்தியம் அப்போது நான் சிறுவனாக இருந்தபோது இரவு பகல் பார்க்காமல் எங்கள் வீட்டு வாசலில் என் தாத்தாவை வைத்தியராகவும் மந்திரம் தெரிந்தவராகவும் நினைத்துவந்து அழைப்பார்கள் என் தாத்தா அப்போது ஊரில் இருந்த அதிக வயதானவர்களில் ஒருவரும் சிறந்த பக்திமானும் ஆவார். வீட்டு முற்றத்தில் உள்ள வரண்டாவில் படுத்திருக்கும் தாத்தாவும் உடனே எழுந்து வந்து .....
அபோதெல்லாம் எங்கள் கிராமம் வளர்ச்சி அடையாமல் இருந்தது.இரண்டுஅல்லது மூன்று பழைய கல் வீடுகள் (அதுவும் பர்ரமரிப்புயின்றிப் பாழடைந்த நிலையில்) இருக்கும் மீதி அனைத்தும் பனை ஒலைகளால் மேவப்பட்ட கூரைவீடுகள்தான்..ஊரைச் சுற்றி உடை முள் மரங்கள்..வீட்டுக்குப் பின்புறம் குப்பைகள் செடி செத்தைகள் நிறைந்த வளவு என்று ஒரு பகுதி இருக்கும்....
இரவில் வரும் அதிகம் பேர் கையில் அழும் குழந்தையுடன் தாய்மார்கள் குழந்தையைத் தேள் கொட்டிவிட்டதாகத்தான் வருவார்கள் ...அப்போது எங்கள் வீடும் கூரைவீடுதான் எனக்குகூடச் சிறுவயதில் தூக்கத்தில் கூரை மோட்டிலிருந்து விழுந்த தேள் கொட்டிய அனுபவங்கள் உண்டு ...
தேள் கொட்டிவிட்டதாக யார் வந்தாலும் தாத்தா உடனே வாசலில் நிற்கும் வேம்பு மரத்தில் இலைகளுடன் கூடிய ஒரு குச்சியை முறித்து..தேள் கொட்டி அழும் குழந்தையின் முகத்திலும் உடலிலும் தடவிக்கொண்டு அவர் வாயில் மந்திரம்போல் எதையோ முணுமுணுத்துக்கொண்டே....தடவி விடுவார் ச்சீ..போச்சு போ...என்று விறைப்பாகக் கண்ணை விழித்துக்கொண்டு சொல்வார் ..குழந்தையும் அழுகையை நிறுத்திவிடும் ...வீட்டில் போய் வெங்காயத்த அரைத்து தேள் கொட்டிய இடத்தில் தடவச் சொல்வார்.. வைத்தியம் முடிந்தது.
பகலில் நிறையப் பேர் வருவார்கள் குழந்தைகளுடன்.. குழந்தைகள் சாப்பிடவில்லை என்றால் கொறி பட்டுவிட்டதாகவும்....குழந்தைகள் உடலில் படை சொறி வந்தால்...பார்வை பட்டுவிட்டது என்றும்,தீட்டு பட்டு விட்டது என்றும் ..இப்படி நிறைய...என் தாத்தாவோ...தாயுடன் குழந்தையை எதிரில் தரையில் உட்கார வைத்து அடுப்பு சாம்பலை எடுத்துச் சொளவு (முறம்) பின்புறம் பரவலாக பரத்தி அதில் கை விரலால் ஏதோ கிறுக்குவார்..பிறகு வாயில் ஏதோ மந்திரத்தை முணுமுணுத்துக்கொண்டு...ச்சீ..போச்சு போ...என்று விறைப்பாகக் கண்ணை விழித்துக்கொண்டு சொல்வதுடன் சாம்பலை ப்பூ என்று அவர்கள் முகத்தில் ஊதுவார் ....கோயிலில் போய் வேப்பமரத்து இலைகளைஅரைத்து சாமிக்கு படைத்து குழந்தைக்குக் குடிக்க கொடுக்கச் சொல்வார்... வைத்தியம் முடிந்தது.
இது மட்டுமா...?இன்னும் நிறையப் பெரியவர்களும் பகலில் வருவார்கள்
உடம்பு பிடித்துக்கொண்டதாகப் பெரிய ஆண்களும் இடுப்பை பிடித்துக்கொண்டு வருவார்கள்...தாத்தா ...உடனே துணைக்கு ஒருவரை அழைப்பார் ...அருகில் உள்ள வாடாச்சி மரத்தில் ஒரு நீண்ட குச்சியை எடுத்து இரண்டாகப் பிளப்பார்.....பிளந்த குச்சியை உடம்பு பிடிப்பில் அவஸ்தை பாடுபவரையும் துணைக்கு அழைத்தவரையும் பிளந்த இரண்டு குச்சிகளையும் இடுப்பில் இருவரும் பிடித்துக்கொண்டு நேருக்கு நேர் நிற்க வைப்பார்..வாயில் ஏதோ மந்திரம் முனங்குவார்..சடக்குன்னு இரண்டு பிளந்த குச்சிகளையும் பிடுங்கி இரண்டாக மடித்து ஒடித்து...ச்சீ..போச்சு போ...என்று விறைப்பாகக் கண்ணை விழித்துக்கொண்டு சொல்வார்...கொஞ்ச நாளைக்கு மீனு கருவாடு கூட்டாதே (சாப்பிடாதே) என்று சொல்ல்லி அனுப்புவார்...உடம்பு பிடித்ததாக வந்தவரும் கொஞ்சம் நிமிர்ந்து நடை போட்டு போவார்.... வைத்தியம் முடிந்தது
இப்படி நிறைய வைத்தியங்கள்...? செய்வார்...எங்கள் கிராமத்தில் வைத்திய வசதிகள் கிடையாது...அப்போதெல்லாம் வைத்தியம் பார்க்க வேண்டுமென்றால் அருகில் உள்ள பெரிய ஊருக்கு இரண்டு கிலோ மீட்டர் நடந்து போகவேண்டும் அதனால் நிறைய பேர்கள் இவரிடம் வருவார்கள்
ஆனால் தாத்தா தட்சணை என்று எதுவும் வாங்குவதில்லை யாரும் காசு எடுத்து நீட்டினால் அவர்களைக் கோபத்தில் வசைபாடிவிடுவார்..அதனால் எல்லோரும் வைத்தியம் முடிந்ததும் திரும்பிப் பார்க்காமல் சொல்லாமல் கொள்ளாமல் அப்படியே சென்றுவிடுவார்கள்....
நான் கல்லுரி படிக்கும்போது விடுமுறையில் எப்போதாவது நான் பிறந்த ஊருக்கு வரும்போது....தாத்தாவிடம் கேட்பேன் எனக்கும் அந்த மந்திரங்களைச் சொல்லித்தாருங்கள் என்று....அவரும் எதுவும் சொல்லமாட்டார் ..அதுலாம் உனக்கு எதுக்குல..? என்று முறைப்பார்...என் தொல்லை தாங்க முடியாமல் உண்மையை உடைத்து விட்டார் ..
"அதுல மந்திரம் எதுவும் இல்லல அதெல்லாம் தந்திரம்ல...நான் இப்படிலாம் பண்ணுனா...அவுங்களுக்கு சரியாப் போயிடும்முனு நம்புறாங்கள...அதுதான் இந்த மாதிரி நானும் நடிச்சு அவுங்களுக்கு நம்பிக்கையை வளக்கிறேன்..எல்லாம் மனசுதான் காரணம்ல.."
இதை இப்போது நினைத்தாலும்...சிரிப்பு வருகிறது..
இங்கே சென்னையில் சில மாதங்களுக்கு முன் நான் காலையில் படுக்கையிலிருந்து எழும்போது தலை சுற்றலாகவும் மயக்கமாகவும் இருந்ததால்... அருகில் உள்ள பெரிய மருத்துவ மனைக்குப் போனேன்...அந்த டெஸ்ட் ..இந்த டெஸ்ட் என்று அம்பது டெஸ்ட் எடுத்துப் பார்த்து விட்டு சுமார் பத்தாயிரம் ரூபாயும் பிடுங்கிக்கொண்டு....
மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்துச் சீட்டை மருந்தகத்தில் கொடுத்தால் து தூக்க மாத்திரைகள்தான் கொடுத்தார்கள் அப்புறம் தான் நினைவுக்கு வந்தது வேலை நிமித்தமாக ஒரு மாதம் நான் சரியாக இரவில் தூங்க முடியாமல் போனதும் .....அதனால் வந்த பாதிப்பும்தான் இதுவென்று... இப்போதுதான் தெரிந்தது தாத்தா வைத்தியத்தின் அருமை..மந்திரமா?தந்திரமா? எதுவுமில்லை
நம்பிக்கை...நம்பிக்கை.... நம்பிக்கை
மிகுந்த பக்திமானாகிய என் தாத்தா அந்த காலத்தில் ஆன்மீகமந்திரத்தை எப்படி தந்திரமாக ஊர்மக்கள் மனதில் நம்பிக்கையை வளர்த்து வைத்திருந்திருக்கிறார்
இப்போது ஆன்மீகவாதிகள் பலர் தொட்டால் பலன் (தடவினால்..? பலன்) அத்தனைக்கும் பணம் என்று வசூல்வாதிகள் ஆகிவிட்டார்கள்..பணம் போனாலும் பரவாயில்லை...? கதவைத் திறவுங்கள் காற்று வரட்டும் என்று சொல்லி.... சிலர் மானம் இழந்து இன்னும் சிலர் கற்பிழந்து...இப்படி ஆன்மீகத்தை கேவலமாக்கி விட்டார்கள்...
அதிலும் சிலர் நல்லவர்கள் உண்மையான ஆன்மீகவாதிகள் மக்கள் அறியாமையை எடுத்து இயம்புகிரவர்கள் இருக்கிறார்கள்..
அதிலும் சுகி சிவம் போன்றவர்கள் அவரது உரைகள் சில அறியாமை இருளை அகற்றும் ஆன்மீக விளக்காக இருக்கும் ...இன்னும் சில உண்மையை உலகுக்குச் சொல்லும் ..நிறைய நல்ல தன்னம்பிக்கை ஊட்டும்......வா..வாழ்ந்து பார்க்கலாம் என்று அழைப்பு விடும் ....
.................................பரிதி.முத்துராசன்
thanks-YouTube-Pallassana1
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |