google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சென்னையில் ஒரு நாள்-சினிமா விமர்சனம்

Wednesday, April 03, 2013

சென்னையில் ஒரு நாள்-சினிமா விமர்சனம்


சென்னையில் ஒரு நாள்-  இதயமாற்று அறுவை சிகிச்சை மற்றும் உடலுறுப்புத் தானம் பற்றிய படம் என்று அறிந்ததும் மனதில் கொஞ்சம் இறுக்கமும் சோகமும் கவ்விக்கொண்டது...ஆனால் படம் பார்த்ததும் ஒரு நல்ல விழிப்புணர்வு செய்தியை சமுக நலன்கருதி மக்களிடம் கொண்டு சேர்க்கும் கடமை சினிமாவுக்கு உண்டு என்பதை உணர்த்திய  தயாரிப்பாளர்களுக்கு அதிலும் ராதிகா சரத்குமார் அவர்களுக்கு  நமது முதல் நன்றியையும் பாராட்டையும்  சொல்லவேண்டும்

பத்து நிமிடத்தில் சொல்லி முடிக்கவேண்டிய டாக்குமென்ட்ரி படத்தை இரண்டுமணிநேரம் கொஞ்சம் கூட நம்மைத் தளர்ச்சியடையாமல் எதிர்பார்ப்புடனும்  தவிப்புடனும் திரையரங்கில் இருக்கச் செய்த   இயக்குனர்  ஷாஹித் காதர் பாராட்டப்பட வேண்டியவர்


சென்னையில் வாகன விபத்தில் ஒ.எம்.ஆர். ரோடில் உள்ள ஒரு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த கார்த்திக் என்ற வாலிபரின் இதயத்தை 170 கீ.மி தொலைவில் இருக்கும் வேலூர் மருத்துவமனையில் உள்ள ஒரு பெண்ணுக்கு நெடுஞ்சாலை வழியாகக் குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டு சென்று வெற்றிகரமாகப் பொருத்தப்படுவதும் இடையில் நடக்கும் சில குளறுபடி காலத் தாமதங்களுமே  இப்படத்தின் கதை...சென்னையில் ஒரு நாள் என்பதைவிட ஒர் இதயத்தின் பயணம் என்ற பெயர் சரியாக இருக்கும்   

உடல்உறுப்புத் தானம் பற்றிய விழிப்புணர்வு கதையாயினும் ஒரு நாவல் போன்று அதையே  சொல்லிக்கொண்டு அழுது வடியும் சென்டிமென்ட் காட்சிகள் சம்பவங்கள் எனக் கதைவிடாமல் சினிமாத்தனங்களைப் புகுத்தி படம் விறுவிறுப்பாகவும் த்திரிலிங்காகவும் செல்கிறது...படத்தின் இடைவேளை படம் பார்ப்பவர்களை எழுந்து போகவிடாமல் எதிர்பார்ப்புடன் அடுத்து என்ன...? எங்கே போனது கார்...? என்று ஆங்கிலப் படத்துக்கு நிகரான சஸ்பென்ஸ்வுடன் இருப்பது படத்தின் வெற்றிக்கு முழுக்காரணம் 

கதாப்பத்திரங்களுக்கு நடிகர்கள் தேர்வு மிகவும் சிறப்பாக இருக்கிறது...கதைக்குள் கதையாக நிறைய ஊடு கதைகள் இருந்தாலும் அத்தனையும்  படத்தின் முக்கியக் கதையைச் சிதைக்காமல் குறைந்த அளவாக  நறுக்கென்று சொல்லியதால் படத்தின் பாய்ச்சல் பாதிக்கவில்லை.

மகனின் இதயத்தைத்  தானம் செய்யும் தந்தையாகவும் மருத்துவராகவும்  வரும் நடிகர்  ஜெயபிரகாஷ்..சோகத்தையும் யதர்த்தத்தையும் சிறப்பாகக் காட்டுகிறார். அதே நேரத்தில் பெரிய பிரபல நடிகராகப் பிரகாஷ் ராஜ் அவருக்கே உரிய தனித்தன்மையுடன் மிளிருகிறார்.மகள் உயிர் பிழைக்கப்  பரிதவிக்கும் தாயாகவும்  ராதிகா சரத்குமாரின் நடிப்பு மணிமகுடம் கார் ஓட்டிச்செல்லும் ட்ராபிக் போலிஷ்காரராகச் சேரன் இயல்பான நடிப்பு ..மற்றபடி ட்ராபிக் கமிசனராக வரும் சரத்குமார், படத்தில் இந்த MISSION-ல் முக்கிய பங்கு வகித்தாலும் நடிப்பதற்கு என்று எந்த காட்சிகள் இல்லை என்றாலும்  சோடை போகவில்லை டாக்டராக வரும் பிரசன்னா அப்படியொன்றும் மோசமில்லை ஆனாலும் பாராட்டும் படியும் இல்லை

படத்தின் உச்சகட்டத்தில் நடிகர் சூர்யா நடிகராகவே தொலைக்காட்சியில் தோன்றி படத்தின் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொள்கிறார்..நிஜத்திலும் சமுக ஆர்வமிக்க நடிகர்களில் ஒருவரான  நடிகர் சூர்யா படத்திலும் அப்படியே நல்ல தேர்வு...
திரைக்கதையில் போக்குவரத்து சிக்னல் கம்பம்  ஒரு கதாப்பாத்திரமாகவே வந்து சொல்லும் தத்துவம் புதுமையானது அளவான வசனங்கள்..குறைவான பேச்சுக்கள் படத்துக்கு சிறப்பு.  
























மற்றும் மூளைச்சாவு அடைந்து மருத்துவ மனையில் உயிருள்ள பிணமாகக் கிடக்கும் தன் காதலனை பார்க்கும்  காதலியின் மனநிலையும் அந்நேரம் காதலன் உணர்வற்ற உடல் துடிப்பதையும் பார்க்கும் காட்சி  நமது நெஞ்சையும் வருடுகிறது.....( என் விழிகளில் நீர் முட்டச் செய்த காட்சி இது..அன்று சிறு வயதில் எனது தாயார் மரணப்படுக்கையில் கோமா நிலையில் ...... யார் அழைத்தாலும் எந்த உணர்வும் காட்டாத என் அன்னை அ..ம்..மா என்று நான் அழைத்தால்  கண்ணை திறக்காமல் வாயைத்திறந்து ஆ...ங் என்று அவள் இதயம் விம்மிய காட்சி   நினைவுக்கு வந்து திரையரங்கில் என்னை ஏதோ செய்தது...என் இதயமும் வலித்தது.)  

                                           thanks-YouTube-RadaanMedia

படத்தில் சில நம்பகத்தன்மை இல்லாத காட்சிகள்....ஹெலிகாப்டர் உபயோகப்படுத்தும் அளவுக்கு வானிலை சரியில்லை என்பது...நெடுஞ்சாலையிலிருந்து பிரசன்னா காரைக் கடத்த சொல்லப்படும் கதை..நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் காருக்கு வழி கிடைக்கச் செய்யும் மிகைப்படுத்தப்பட்ட  காட்சிகள் இப்படிச்  சில இருந்தாலும் சோகத்துக்குள் மறைந்திருக்கும் ஒரு காதல் இதயத் துடிப்பை இசை,பாடல்கள்,எடிட்டிங்,ஒலிப்பதிவு,ஒளிப்பதிவு..நளினமாக நயமாக வெளிப்படுத்தி படத்தை  மிகவும் சிறந்த நிலைக்கு மின்னல் வேகத்தில் கொண்டு செல்கின்றன....

இன்றைய தமிழ் சினிமா உலகில் அதிஷ்டகாற்றில் அடித்துச் செல்லப்படும் நிறையக் குப்பைகள்  கோபுர கலசத்தில் ஒட்டிக்கொள்கின்றன  ஆனால் சென்னையில் ஒரு நாள்  போன்ற படங்கள்  வேறு மொழிகளில் வந்தவைகளாக இருந்தாலும்   குப்பைகளைப் புறம்தள்ளி வெற்றிப் பெறவேண்டும் தமிழ் திரையுலகின் கோபுர கலசங்களாக உச்சத்தில் இருக்கவேண்டும்...சினிமா  ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே சமுதாயமும் ஆரோக்கியமாக இருக்கும்..

சென்னையில் ஒரு நாள்-ஒரு சாதாரணத் திரைப்படம் அல்ல ஆரோக்கியமான சமுதாயத்துக்குத் தேவையான விழிப்புணர்வுச் செய்தி சொல்லும் 100/100  ஒரு சிறந்த சமுதாயத்  திரைப்படம் 

*****************************************************************************
நீங்கள் படம் பார்த்தவராக இருந்தால்...
உங்கள் கருத்தை மதிப்பெண்களாக வழங்க வேண்டுகிறேன்....

.வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..............



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1