கசாப்புக்கடைக்காரன்
காந்தியம் படிப்பது
ஆட்டுக் கழுத்தில்
கத்தி வைத்துக்கொண்டு
"எவ்வளவு கிலோ
எடை தேறும் இது...?" என்று
எண்ணுவது போல் உள்ளது.
ஆட்சிக்கு வர
நல் வழிகள் ஆயிரம் உண்டு..
அவைகளை மறந்துவிட்டு
பசும் தோல் போர்த்திக்கொண்டு
பதுங்கி வரும் போதே
புலியின் நடை புரியாதா?
கண்களில்
சாதி வெறிகொண்டால்
பிணம் தின்னும் பார்வை
கழுகைப் பார்த்தாலே தெரியாதா?
காதல் என்பது
காமன் பெற்ற
தருதலைக் குழந்தை
இன்னும் இதுவரை
எந்த அகராதியிலும்
அர்த்தம் எழுதவில்லை
அபத்தம் என்றவனும்
அந்தக் கடல் தாண்டவில்லை
பெண்ணைப் பெற்றவன்
வளர்க்க தெரியவில்லை என்றால்
கலப்புக் காதலை
வசைபாடுவதில் நியாயமில்லை
அரசு மதுக்கடைகள்
நாட்டுக்கு தேவையில்லை
என்பவர் எல்லாம் இங்கே
கள்ளச்சாராயம் காய்க்கும்
கயமை வியாபாரிகள் இல்லை
ஆனால்
மதுப்போதை மயக்கத்தில்
மது ஒழிப்பு பேசுகின்றவர்
வார்த்தைகளில் ஒலிப்பது
ஓநாயின் ஓலமிடும் குரல்
இப்படி ஐந்து புலன்களையும்
அடக்கி ஆளாதவர்
அரசனாக ஆசைப்பட்டால்...
நாட்டின் நிலை என்னவாகும்..?
நாட்டு மக்கள் நிலை என்னவாகும்..?
கவிதை தந்த குறள் 25:
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்
எச்சரிக்கை-இது எந்த அய்யாவையும் கொய்யாவையும் தாக்கி எழுதப்பட்ட பதிவவும் அல்ல.... தவறாக யாரும் புரிந்து கொண்டால் நான் பொறுப்பல்ல
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |