google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இங்கேயும் ஒர் இளவரசன்-திவ்யா காதல்...

Saturday, July 06, 2013

இங்கேயும் ஒர் இளவரசன்-திவ்யா காதல்...



அர்த்தமில்லாத அகராதி-3  (இங்கேயும் ஒர் இளவரசன்-திவ்யா காதல்...)
(குறிப்பு-இது 20 வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை நிகழ்வு. இந்தப் பதிவில் சமுக நலன் கருதி எந்தச் சாதியின் பெயரும் குறிப்பிட வில்லை)

1992 - சென்னை நகரின் மையப் பகுதியில்  வசித்த போது ஒருநாள் மாலை அங்கே உள்ள எனது நண்பர் அவசரமாக அழைக்க அவரது இல்லம் சென்றேன்...
மாடியில் வீடு கீழே அவரது  கடை..எப்போதும் என்னைக் கண்டதும் புன்னகை சிந்தும் அவரது முகம் விம்மியபடி பார்க்க பரிதாபமாக இருந்தது...
காலையில் கோயிலுக்குப் போவதாகச் சென்ற அவரது மகளைக் காணவில்லை என்று தயங்கியபடி சொன்னார்...
"அவ யாருடனும் பேசவோ பழகவோ பார்த்தில்லைப்பா...எவனாவது கடத்திட்டானோ என்னவோ தெரியலையே...?"
சொல்வதற்குகூட அவருக்கு அவமானமாக இருப்பது போல...

அவரது துணைவியாருக்கு ஆறுதல் சொல்ல கடையின் மாடியிலிருந்த அவரது வீட்டுக்கு சென்றேன்..வீடு கலையிழந்து  சோகத்தில்...இன்னும் சில அவர்களது உறவினர் பெண்கள் இருந்தார்கள்...அந்த தாயின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்த வார்த்தை 'ஓடு காலி' என்பதுதான்....
"இன்று இரவுக்குள் எப்படியாவது அந்த மூளியை கண்டுபிச்சு...இழுத்துட்டு வாப்பா...இல்லனா நான் உயிரோடு இருக்க மாட்டேன்"  

கொஞ்ச நேரத்தில் அவரது எல்லா உறவினர்களும்  நண்பர்களும் வந்து குவிந்தனர்...ஒரு இடம் பாக்கியில்லாமல் தேடினோம்...ரகசியமாகத்தான் ஆனால்,இரவு ஆகிவிட்டது... எந்தத் தகவலும் இல்லை  

அப்போது அருகிலிருந்த  காவல் நிலைய ஆய்வாளர் எனது  நெருங்கிய நண்பர்..அவரிடம் மட்டும் புகார் அளித்தேன்...
அடுத்த நாள் இரவில்தான் அவர்களது தீவிர முயற்சியால் சில தகவல்கள் கிடைத்தன...எனது நண்பர்  மகளுக்கும் ஒர் எக்ஸ்போர்ட் துணி தையல் நிறுவனத்தில் வேலை செய்த வாலிபருக்கும் அருகில் உள்ள கோயிலில்  சந்தித்துப் பேசிய தொடர்பு  இருந்தது தெரியவந்தது.... எங்கு மறைந்திருக்கிறார்கள்...? என்று எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை .

ஆனால் அடுத்த நாள் அதிகாலையில்  தகவல் வந்தது 
அவளது தாயார் நள்ளிரவில் தூக்கில் தொங்கி உயிரைமாயித்துக்கொண்டார்கள்....என்று.
பிறகு போஸ்ட் மார்ட்டம்...அடக்கம் என்று போய்விட்டது...
காவல்துறை ஆய்வாளர் மிகவும் வேதனைப்பட்டார்...

அந்த வாலிபர் வேலை செய்த நிறுவனத்திலிருந்து அவரது சில நண்பர்களைப் பிடித்துத்  தீவிர விசாரணை செய்த போது....காவல் நிலையத்துக்கு ஒரு தொலைபேசி வந்தது....காதலர்கள் காவல் நிலையத்தில் சரண் அடைவதாகவும் காதலரின் நண்பர்களை எதுவும் செய்ய வேண்டாம் என்று

தொலைப்பேசியில் பேசியது அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு சாதி தலைவர் அவர் வீட்டில்தான் அந்தக் காதலர் வாடகைக்குத் தங்கி இருந்தாராம் 

அப்படியே அந்தக் காதலர்கள் காவல்நிலையத்தில் அடுத்த நாள் தஞ்சம் அடைந்தார்கள்...அவர்கள் தாங்கள் மேஜரானவர்கள் என்றும் தாங்கள் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும்  ஆய்வாளரிடமும் எங்களிடமும் சொன்னார்கள்...

அப்போது அந்தக் காதலன் சாதியைச் சேர்ந்தவர்கள் அவர்கள் காதலை ஏற்றுக்கொண்டு  வீட்டோடு காதலர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டினார்கள்......ஆனால் என் நண்பரோ தனது மனைவியின் சாவுக்கு காரணமான தன் மகளை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்

அவர்  தன் மகளிடம் தழுதழுத்த குரலில் சில கேள்விகள் கேட்டார்...
அப்பா="என் பிள்ளாய்..அம்மா செத்துப்போனா...தெரியுமா உனக்கு?" 

மகள்="ஒ...தெரியுமே...எங்க காதலும் அம்மாவுக்குத் தெரியும் அவுங்க இதுக்கு ஒத்துக்க மாட்டேன்னாங்க...நான் ஓடிப் போயிடுவேன் என்றேன்...அதுக்கு அவுங்க...நீ அப்படிச் செய்ஞ்ச  அடுத்த நாளே செத்துப்போவேன்னு சொன்னாங்க அதுவும் தெரியும்"

அப்பா="அட..நாயே...அம்மாவுக்குத் தெரிஞ்சே ஓடிப்போனியா...? அந்தச் செருக்கியும் எதுவும் சொல்லாம செத்து போயிட்டாளே..."

அவ்வளவுதான் அவர்கள் பேசிக்கொண்டது....அவர் தன் மகளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்  
அன்று இரவுவரை அவருடன்தான் இருந்தேன்...எப்போதும்  அவர் புலம்பிக்கொண்டிருந்தார்..."தெரிஞ்சித்தான் ஓடிப்போனாளாம்"

அடுத்த நாள் அதிகாலையில் என் வீட்டுக்கு  தகவல் வந்தது...
அவர் .நள்ளிரவில் மாரடைப்பில் இறந்து போனார்....என்று.
அவர்களால் இந்தச் சமுதாயத்தில் நிலவும் சாத்தியமில்லாத சாதீய உணர்வுகளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை 

இன்றுவரை அவருக்கு இருந்த இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்விக்க நானும் இன்னும் சில அவரது உறவினர்களும்  பட்ட கஷ்டம் சொல்லமுடியாத அளவு சோகம் நிறைந்தது.

அவருக்கு இருந்த  தறுதலை மகன் வீடு...கடை அனைத்தையும் விற்று அப்படியொரு மனிதர் அங்கே வாழ்ந்தார் என்ற சுவடே இல்லாமல் செய்துவிட்டான் 

அந்தக் காதலர்களோ  சென்னை புறநகரில் குழந்தைகளுடன் நன்றாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் அவர்கள் காதல் ஒரு குடும்பமே அழிந்துபோகக் காரணமாக இருந்தது...இதை நினைத்து சில நேரங்களில் அவள் மனநிலை பிரளுவதாகக் கேள்வி...
இதில் யாரைக் குறைசொல்வது.....கொஞ்சம் காதல் நிறையச் சாதல்

இந்த இருபது வருட காலகட்டங்களில் இது போல் நிறையக் காதலல்களைப் பார்த்துவிட்டேன்...இப்போதெல்லாம் இங்கே யாரும் சாவதில்லை

எனக்குத் தெரிந்த இங்கே ஒரு பணக்காரரின்  மகள் இன்னொரு சாதி காதலருடன் ஓடிப்போனாள்...முதலில் கோபித்துக்கொண்ட அவரும் இப்போது காதலர்களைத் தன்  வீட்டோடு வைத்திருக்கிறார்...

இன்னொரு மிகப்பெரிய பிஸ்தாவின்   மகள் இதே காதல்தான்... அவர் நினைத்திருந்தால் அவர் சாதிப்பெருமை காக்க எத்தனை கொலைகள் வேண்டுமாயினும் செய்ய முடியும்.ஆனால் இன்று அவளது காதலன் அவரது வீட்டோடு மருமகன்.

சமீபத்தில் என்னோடு பணிபுரியும் நண்பருடைய மகளுக்குத் திருமணம் முக்கியமான சிலருக்கு தெரிவித்துவிட்டு அவரது உறவினர்கள் நண்பர்கள் நிறையப் பேர்களுக்குப் பத்திரிக்கை வைக்கவில்லை மண்டபத்துக்குப் போனப்பிறகுதான் தெரிந்தது ....சாதி-மதம் இரண்டிலும் அவருக்கு வேறுபட்ட கலப்புக் காதல்.முதலில் அவர் மகளிடம் போராடிப் பார்த்தார் பிறகு மனதை திடப்படுத்திக்கொண்டார்  இப்போது மகள் பேரனுடன் கொஞ்சி விளையாடுகிறார்.  

இப்படி நகர்புற காதல் நாகரீகமாக மாறிவிட்டது....
இன்னும் கிராமங்களில்தான் காதல் கவுரவம் பார்க்கிறது.
வயது வந்தவர்களுக்கு அவரவர் வாழ்க்கையை அவரவர் தேடிக்கொள்ள உரிமையில்லையா?  பிள்ளைகளிடம் பாசத்தைக் காட்டுங்கள் கவுரவத்தைக் காட்டாதீர்கள்

இந்தச் சாதிக்காதலை பெரிதாக எடுத்துக்கொள்ளும் போது 
அது காட்டுத் தீயாக பற்றி எரிகிறது....எல்லோரையும் எரிக்கிறது 



freeonlinephotoeditor  

இங்கே காதலுக்கு 
என்ன அர்த்தம்.......?
எதுவும் புரியவில்லை
எவருக்கும் தெரியவில்லை 

காதலில் 
சாதி இருந்தால் 
இருக்கட்டும்...
அதனால்
சாதிக்கப்போவது 
எதுவுமில்லை 

சாதி-
சமுதாயத்தின் 
வியாதி....
காதல் மட்டுமே 
அதற்கு மருந்தல்ல 

ஆனால் 
இங்கே  காதலில் 
சாதிய அரசியல் 
இருக்க வேண்டாம்......
அது செய்துவிடும் 
கொஞ்சம் காதல் நிறையச் சாதல்  

இரு மனங்களில் 
தளிர்விட்டக்  காதலை 
சாதியின் பெயரால்....
இரண்டு அரசியல்வாதிகள்
வெட்டிச் சாய்த்தார்கள்.  


அகராதி=அகரம்+ஆதி ....ஏதாவது அர்த்தம் புரிகிறதா? 
அகராதி என்பது வார்த்தைகளுக்கு அர்த்தம்...விளக்கம் சொல்வது..
அகராதிக்கே அர்த்தம் தேடினால் என்னத்தைச் சொல்வது...? 
பிரித்துப் பார்த்ததுதான் மிச்சம் இப்படித்தான் இங்கே காதலுக்கு விளக்கம் சொல்லும் அகராதி எதுவுமில்லை....இப்படித்தான் இந்தச் சமுதாயத்தில் நடக்கும் நிறைய விசயங்கள் எதுவும் புரிவதில்லை 
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்குவதும் அர்த்தமில்லாததாக ஆக்குவதும் அவரவர் செயல்களே 

                 .....................................................(எப்போதாவது தொடரும்)

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1